Thursday, 5 November 2015

ஜீவன ஸ்தான அடிப்படையில் ஒரு ஜாதகருக்கு சரியான தொழில் நிர்ணயம் செய்வது எப்படி ?

சுய ஜாதகத்தில் வலிமையுடன் இருக்க வேண்டிய பாவகத்தில் முதன்மையாக கருதவேண்டிய பாவகம் ஜீவன ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியம், மாறாக வலிமை இழக்கும் பொழுது ஜாதகரின் வேலை அல்லது தொழில் சிறப்பாக அமையாமல் ஜாதகரின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய  சில நல்ல விஷயங்கள் கூட நடை பெறாமல் தாமதம் அல்லது தடையை ஏற்படுத்துகிறது , குறிப்பாக சொல்லவேண்டும் எனில் ஜாதகருக்கு நல்ல வேலை அல்லது தொழில் அமைந்தால் மட்டுமே நல்ல திருமண வாழ்க்கை சரியான வயதில் அமைகிறது, மேலும் தனது குடும்பத்தை சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற இயலும்.

முக்கியமாக  தனது பெற்றோர்களின் மனதை கஷ்டப்படுத்தாமல், அவர்களின் வயதான காலத்தில் ஜாதகரால் சந்தோஷமாக வைத்துகொள்ள முடிகிறது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் அமைந்தால் மட்டுமே ஜாதகர் சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதராக இயங்க முடியும், இல்லை எனில் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்புதான், மேலும் தனது தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே ஜாதகர் மற்றவர்களின் கரங்களை எதிர்நோக்கியிருக்க வேண்டிய சூழ்நிலை தந்துவிடுகிறது .

ஜீவனம் நல்ல நிலையில் அமையாத பொழுதே ஜாதகர் தவறான வழியில் தனது வாழ்க்கை வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் , தான் சுயமாக சிந்தித்து செயலாற்றும் தன்மையை தரும் ஜீவன ஸ்தானம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகரால் தனிப்பட்டு செயல்பட  இயலாமல் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது, ஒருவேளை சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்டு இருந்தால் 10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியம்.

10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் திருமணம் நடை பெரும் காலம் வரையில் ஜாதகருக்கு நல்ல ஜீவனம் அமையாது , திருமணம் நடைபெற்ற குறுகிய காலத்திலேயே ஜாதகர் நல்ல ஜீவன முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தந்துவிடும், சில அன்பர்களின் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் காண்பது இதன் அடிப்படியிலேயே என்பது மட்டுமே முற்றிலும் உண்மை , இந்த அமைப்பை பெற்ற அன்பர்கள் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை துணையை மிகவும் அன்பாக நடத்துவது அவசியம் காரணம் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல ஜீவன முன்னேற்றத்தை தந்ததும், சமுதாயத்தில் சிறந்த கௌரவத்தையும் தந்தது ஜாதகரின் வாழ்க்கை துணைதானே .

மேற்கண்ட  ஜீவனம் மற்றும் களத்திரம் இரண்டும் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர்  களத்திர ஸ்தானத்திற்கு 10ம் வீடான 4ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால், ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் பாவக வழியில் இருந்தும்  ஜீவனத்தை தரும் , ஜாதகர் 4ம் பாவக வழியில் இருந்து ஜீவன வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் .

ஆக ஒரு ஜாதகர் வாழ்க்கையில் ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் எனில் அவரது சுய ஜாதகத்தில் தகப்பனாரை குறிக்கும் 10ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லது தாயாரை குறிக்கும் 4ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், இந்த இரண்டும் ஒருவேளை பாதிக்க படும் பொழுது  ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் மேற்கண்ட 3பாவகமும் பாதிக்க படும் பொழுதே ஜாதகர் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் சார ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் தனது சுய முயற்ற்சியால் தனித்து செயல்பட்டு தொழில் அல்லது வேலை வாய்ப்பில் எளிமையான வெற்றிகளையும் , மிகப்பெரிய ஜீவன முன்னேற்றத்தை பெரும் தன்மையை தந்துவிடும். குறிப்பாக ஜாதகருக்கு அமையும் தொழில் அல்லது வேலை குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கி விடும் , வருமானம் என்பது மிக அதிக அளவில் கிடைக்கும், ஜாதகருக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பது எவராலும் நினைத்து பார்க்காத அளவில் இருக்கும்.

 ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஸ்திர  ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் ஸ்திரமான நிலையுடன் நிரந்தர  ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும் , மேலும் ஜாதகர் பல தொழில் செய்யும் யோகத்தையும், தொடர்ந்து நிலையான நல்ல வருமானத்தை பெரும் தன்மையையும் தந்துவிடும், ஜாதகர் ஆரம்பிக்கும் தொழில்கள் பல தலைமுறைக்கு தொடர்ந்து நிலையாக நடந்துகொண்டே இருக்கும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் உபய  ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் கூட்டு தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றங்களை பெறுபவராக இருப்பார், பல பெரிய மனிதர்கள் செய்யும் தொழில்களில் ஜாதகருக்கும் கணிசமான பங்கு நிச்சயம் இருக்கும், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது மற்றவர்களை சார்ந்தே இருக்கும் என்பது கவனிக்க தக்கது, இவர்கள் செய்யும் சிறு தொழில்கள் அல்லது கூட்டு தொழில்கள் நல்ல வெற்றியை தரும், ஆனால் ஜாதகர் பெரிய தொழில்களில் தனித்து இறங்குவது அவ்வளவு நல்லதல்ல, பெரிய வளர்சியையும் தருவதில்லை.

ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் செய்யும் எந்த ஒரு தொழிலும் ஜாதகருக்கு நிச்சயம் தோல்வியை தருவதில்லை, இதை ஒரு சிறந்த  ஜோதிடரை கொண்டு தனது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திரம்,சுக ஸ்தானத்தின் வலிமை உணர்ந்து , செய்யும் தொழில் அல்லது வேலையை தேர்ந்தெடுத்து செய்து வாழ்க்கையில் வெற்றி காணுங்கள் அன்பர்களே !

அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தாங்கள் செய்யும் தொழில் 3 அல்லது 4 வருடங்களில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னிறைவான வாழ்க்கையையும் தரும் , இதை தவிர்த்து 4 வருடங்களுக்கு மேலும் தங்களுக்கு முன்னேற்றம் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்துகொண்டு இருக்கின்றீர்கள் என்றால்,  தங்களுக்கு பொருந்தாத தொழிலை அல்லது வேலையை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதே முற்றிலும் உண்மை .

No comments:

Post a Comment